சென்னை:மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்திலேயே தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை வைத்துள்ளார்.
சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கியபோது நேற்று பேசிய அமைச்சர் துரைமுருகன், "விவாதத்தில் உறுப்பினர்கள் பேசும் போது, புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதை நானும் ஒத்துக் கொள்கிறேன். முதலமைச்சரிடம் நானும் இதே கோரிக்கையை வேண்டுகிறேன். விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் காலத்தில் ஒரு புதிய சட்டமன்றத்தை கட்டுவார்.
கேரளா ஆந்திராவில் சட்டமன்றங்கள் எப்படி உள்ளது என போய் பாருங்கள். சென்னையில் ராஜ்பவனை எடுத்துக் கொள்ளுங்கள், அது நம்முடைய இடம்தான். அதனுடைய வரலாறு படித்து பார்த்தேன். அந்த இடத்தையும் எடுக்கலாம். கிண்டி ரேஸ் கோர்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள், 700 ஏக்கர் கொண்ட இடம். அவர்கள் பணம் கட்ட முடியாத நிலையில் உள்ளார்கள் அதையும் எடுக்கலாம்.
முதலமைச்சர் எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். அவருடைய காலத்தில் புதிய சட்டமன்றம் உருவாக அதை செய்ய வேண்டும் . ஆனால் இந்த கால கட்டத்திலேயே கட்ட வேண்டும் அப்போதுதான் நாமும் இருப்போம்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: "உங்களை விட எங்களுக்கு சம்பளம் கம்மி தான்" ஊதிய உயர்வு கேட்ட எம்எல்ஏவுக்கு துரைமுருகன் பதில்!