சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (அக்.30) வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரையில் நீரை தேக்கிவைக்க வழங்கிய ஆணையின்படியும், ஒன்றிய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்தவாறு நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படியும், முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர், தேக்கப்படும் நீர், மழைப்பொழிவு ஆகியவைகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு கண்காணித்து வருகிறது.
கேரளாவைச் சார்ந்த தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 2021 அக்டோபர் 28 ஆம் தேதி தமிழ்நாட்டின் வாதங்களை கேட்ட பின், 2021 நவம்பர் 11 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்வரை, ஒன்றிய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட நீர்மட்ட அட்டவணையை பின்பற்றுமாறு ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின் படியே நீர்மட்டத்தை பராமரிப்பதற்காக, வைகை அணைக்கு தொடர்ந்து நீரை குகைபாதை வழியாக கடத்துகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிவதாலும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை எடுத்த முடிவின்படி, வைகை அணைக்கு குகைபாதை வழியாக அதிகபட்சமாக வெளியேற்றப்படும் நீரோடு, கேரள அலுவலர்களுக்கு உரிய காலத்தில் முன்னெச்சரிக்கை, அறிவிப்பு அளித்தபின் இன்று காலை முல்லைப் பெரியாறு அணையின் இரு வழிந்தோடி மதகுகளை திறந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் நீரை வெளியேற்றி வருகிறது.