சென்னை: காவிரி வைகை குண்டாறு இணைப்பு தொடர்பான திட்ட பணிகளை விரைவுப் படுத்த வேண்டும் என்று அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேரவையில் கொண்டு வந்தனர். இதுகுறித்து விஜயபாஸ்கர் பேசும்போது, இந்த திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே கொண்டு வந்தது போலவும், வேறு யாரும் இந்த திட்டத்திற்காக முயற்சிக்கவில்லை என்றும் சொல்லுகிறார். காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் கொண்டு வந்தார்.
இந்த திட்டத்திற்கு 9.5.2008 அன்று ரூ. 254 கோடி ஒதுக்கப்பட்டது. காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக கால்வாய் வெட்டுவதற்கும் நிலம் எடுப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், 34. 31 கோடி மதிப்பீட்டில் நிலம் எடுக்கப்பட்டு 71. 6 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டது. மீதி பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.