சென்னை: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் ஆந்திராவின் முயற்சிகளை உடனடியாக தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று(செப்.25) அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாடு அரசு கும்பகர்ண தூக்கத்தை கைவிட்டு விட்டு, உடனடியாக ஆந்திர அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என இபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போதும், எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமர்ந்திருந்த போதும் நிதானத்தோடுதான் நடந்து கொண்டிருந்தார். அவருடைய கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக இப்போது தடுமாறி போயிருக்கிறார், நிதானம் தவறியிருக்கிறார் என்பது அவரது அறிக்கை மூலம் தெரிகிறது. அறிக்கையில் தமிழ்நாடு அரசு 'கையாலாத அரசு', 'விடியா அரசு', 'கும்பகர்ணன் தூக்கம் கொண்ட அரசு' என்று வார்த்தைகளை கொட்டி இருக்கிறார்.
ஆந்திர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கம் கட்டப்போவதாக ஆந்திர முதலமைச்சர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அது ஒரு பொதுக் கூட்ட செய்திதான். அந்த செய்தியை வைத்துக் கொண்டு தமிழ்நாடு அரசு என்ன சாதித்துவிட்டது? என்று அவசர குடுக்கையாக எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்து எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.