சென்னை:சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது. இது தொடர்பாக நமது ஈடிவி பாரத் செய்தி நிறுவனம் பிரத்யேக செய்தியை நேற்று(ஏப்.20) வெளியிட்டிருந்தது. அதில், "சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி கூலிகடவு - சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன.
மேலும் இரண்டு இடங்களில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கேரள அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோடை காலங்களில் கோவை பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாயிகளின் கண்டனத்தையும், வேதனையையும் இந்த பிரத்யேக செய்தியில் ஈடிவி பாரத் பதிவு செய்திருந்தது.
சிறுவாணி இடையே தடுப்பணை குறித்த செய்தி - சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு - கோவை விவசாயிகள் வேதனை!
ஈடிவி பாரத்(Etv Bharat) செய்தியின் எதிரொலியாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிறுவாணி அணை விவகாரம் எழுப்பப்பட்டுள்ளது. பேரவையில் பூஜ்ஜிய நேரத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, சிறுவாணி அணையின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளதாகவும், இதனை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.