சென்னை:தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் இன்று (செப். 18) மாலை டெல்லி சென்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து காவிரியில் கர்நாடகா நீர் திரந்துவிட வலியுறுத்துவது குறித்து பேச உள்ளனர்.
காவிரி நீர் மேலாண்மை கமிட்டி, கர்நாடகாவிடம் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட நிலையில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தினால் காவேரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு நியமிக்கப்பட்டது, ஆனால் அந்த ஆணையம் சொல்லியும் கர்நாடக அரசு கேட்காததால் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் 12 எம்.பி.க்கள் மத்திய நீர்வளத் துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேச உள்ளனர்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மத்திய நீர் வளத்துறை மந்திரியை சந்திக்க செல்கிறோம். இரண்டு குழுவையும் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று மத்திய அமைச்சரிடம் கேட்கப் போகிறோம்.
தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு அழுத்தமோ அறிவுரையோ உத்தரவோ அளிக்க வேண்டும். கர்நாடக அரசு தீர்ப்பாயத்தை எதிர்க்கிறார்கள் ஆனால் நாங்கள் அதைக் கேட்டோம். அரசிதழில் வெளியிட வேண்டாம் என்று கர்நாடகா கேட்டுக்கொண்ட இடைக்கால உத்தரவு எங்களுக்கு கிடைத்தது. உச்சநீதிமன்றம் தலையீட்டிற்குப் பிறகுதான் ஒவ்வொரு முறையும் கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கும்.