சென்னை:இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பத்தூர் மாவட்டம், நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்பு குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைக்கூட அறிந்து கொள்ள முயற்சிக்காமல், தமிழ்நாடு அரசின் மீது ஆளுநர் திட்டமிட்டு அவதூறுப் பரப்புரையை செய்து வருவது மிகுந்த வேதனைக்குரியது.
அரசியல் சட்டப் பதவியில் இருப்பவர் அரசியல் கட்சித் தலைவர்போல், குறிப்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் போன்று பேசி, தமிழ்நாட்டின் சமூகநீதியால் பிறந்துள்ள அமைதிக்கும் குந்தகம் விளைவித்து வருவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 12,525 ஊராட்சிகளில் 4,357 இடங்கள் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி மட்டுமே நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் காரணமாக அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறுப்பேற்க இயலாத நிலை இருந்தது.
இந்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தனது 7-10-2021 நாளிட்ட உத்தரவில் “…. The learned Government Counsel submitted that the election is unopposed. Since this Court feels that the place is not meant to the person of this category, we make it clear that she shall not take charge…” (போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஒதுக்கப்பட்ட இடத்துக்குரிய பிரிவைச் சேர்ந்தவராக இந்நபர் இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிற காரணத்தால், சம்பந்தப்பட்ட நபர் பொறுப்பேற்கக் கூடாது என்று தெளிவாக்குகிறோம்) எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததால் ஊராட்சி மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறுப்பை ஏற்க இயலாத நிலை ஏற்பட்டது.
திராவிட மாடல் அரசின் சமூகநீதிக் கொள்கை, பாஜகவையும், அதன் அமைப்புகளையும் தமிழ் மண்ணுக்குள் செல்வாக்கு பெற முடியாமல் தடுத்து வைத்திருக்கிறதே என்ற ஆதங்கம்தான் ஆளுநர் இப்படி பேச காரணமே தவிர, பட்டியலின - பழங்குடியின மக்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறை இல்லை.
அப்படி அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராலம்” என்று சட்டம் பிறப்பித்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளவர்களை கடிந்து கொண்டிருக்கலாம். அடிக்கடி டெல்லி செல்லும் அவர், உத்தரப்பிரதேசத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 31.8 விழுக்காடும், மத்தியப்பிரதேசத்தில் 63.6 விழுக்காடும் உயர்ந்திருப்பதற்கு கவலைப்பட்டு குரல் கொடுத்திருக்கலாம்.