சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரானது நேற்றைய முன்தினம் (அக்.9) தொடங்கியது. அன்றைய நாளின் முடிவில் நடத்தப்பட்ட அலுவல் ஆய்வுக் கூட்டத்தின் இறுதியில், புதன்கிழமை (அக்.11) வரை மட்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இதன்படி, கடந்த இரண்டு நாட்களும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த நிலையில், நடப்பு ஆண்டின் இரண்டாம் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று (அக்.11) நடைபெற்று வருகின்றன. இதன்படி, காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி - பதில் நேரம் தொடங்கியது.
இவ்வாறு தொடங்கிய சட்டப்பேரவையின் வினாக்கள் விடைகள் நேரத்தில், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை அதிமுக அரசு தொடங்கி வைத்து நிதி ஒதுக்கீடு செய்ததாகவும், விரைவாக திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக விடுபட்ட குளங்களிலும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் 2 என நீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அத்திக்கடவு அவிநாசி திட்டம் அதிமுக அரசால் கொண்டு வந்ததுதான் அதை மறுக்கவில்லை எனவும், ஆனால் நிதி அளிக்கவில்லையே எனவும் கூறினார். மேலும், அத்திக்கடவு அவிநாசி திட்டம் தயாராக இருப்பதாகவும், காளிங்கராயன் அணையில் இருந்து நீர் கிடைத்தவுடன் திட்டம் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். அதேபோன்று அத்திக்கடவு அவிநாசி திட்டம் 2-ம் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளதாக கூறிய அவர், விரைவில் பணிகள் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், “மதுரையில் 13 கால்வாய்கள் உள்ளன. அதில் 11 கால்வாய்கள் சிமெண்ட் கால்வாயாக மாற்றப்பட்டு விட்டது. அவற்றில் சில மதுரை மாநகர் விரிவாக்கப்பட்டப் பிறகு புனரமைக்கப்படவில்லை. அவற்றை சீரமைப்பார்களா?” என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, “மதுரை மாநகராட்சி பெருத்துக் கொண்டே போகிறது. எனவே, சில கால்வாய்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளன. கால்வாய் சீரமைப்பில் மாநகராட்சி மற்றும் நீர்வளத் துறையின் பங்குகள் எவ்வளவு என்பதை உறுப்பினர் பங்கிட்டு தரவும். எங்கள் துறைக்கு கீழ் வருவதை நான் சரி செய்து தருகிறேன்” என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
இதையும் படிங்க:காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு பராமரிப்பை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!