சென்னை: சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், பரம்பிக்குளம் - ஆழியார் திட்டத்தில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தின் கீழ் புதிய அணை கட்ட அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார்.
"அரசியல் கட்சிகள் 60 ஆண்டுகாலமாக தேர்தல் அறிக்கைகளில் ஆணைமலையாறு - நல்லாறு திட்டம் அமைக்கப்படும் என்று கொங்கு மண்டல விவசாயிகள் மத்தியில் வாக்குறுதி அளித்தனர். 60 ஆண்டுகளாக வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 4.5 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முதன்முதலாக இத்திட்டத்தை நிறைவேற்ற கேரள முதலமைச்சரை தொடர்பு கொண்டு வாய்ப்பை உருவாக்கி 25.09.2019 அன்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் எங்களையெல்லாம் அழைத்துக் கொண்டு திருவனந்தபுரம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் இரு அரசுகளுக்கும் இடையே பல பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில் தேர்தல் வந்ததால் நிறைவேற்ற முடியவில்லை. இப்போது உள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் காலத்தில் இப்பிரச்னையை பேசினால் தான் இது முடியும். அவர் இரு மாநிலங்களும் சகோதர மாநிலங்கள் என்ற மனப்பான்மை கொண்டவர். அதனால் இப்பொழுதே இதில் தீவிர கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "இது கேள்வி நேரம் ஜாடை மாடையாக கூட குற்றம் சொல்லக் கூடாது. முன்னாள் முதலமைச்சர் இதில் முனைப்பு காட்டினார் என்று சொல்வதில் தவறு இல்லை, ஆனால் அதிமுக ஆட்சியில் தான் இத்திட்டம் முன்னெடுக்கப் பட்டதாக கூறுவது தவறு. இத்திட்டத்திற்கு முதல் பேச்சு தொடங்கியவனே துரைமுருகன் தான். 1989-ஆம் ஆண்டில் நான் தான் முதல் முறையாக பேச போனேன். இதுவரை அமைச்சர்கள் அளவில் 10 முறையும், அதிகாரிகள் 18 முறை என 28 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்.
இதுவரை ஆனைமலையாற்றில் நாங்கள் தான் அணை கட்டுவோம் என்று உறுதியாக இருந்த கேரளா அரசு, தற்போது நீங்களே கட்டிக் கொள்ளுங்கள் என்ற ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். ஆனைமலையாற்றில் இரண்டரை டிஎம்சி தண்ணீர் கிடைக்கிறது. தற்போதைய கேரளா முதல்வர் நியாயமாக நடந்து கொள்கிறார். அவரிடம் மறுபடியும் பேச சொல்வோம். தற்போது தமிழ்நாடு கேரளா முதலமைச்சர்கள் அளவில் பேசி முடிவு கட்டலாம் என ஒரு யோசனை வந்துள்ளது” என தெரிவித்தார்.