சென்னை: காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்றைய காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி பயிர்களைக் காப்பாற்ற விநாடிக்கு 24000 கன அடி நீர் வீதம் 10 நாட்களுக்குத் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், கர்நாடக அரசு 5000 கன அடி நீர் 15 நாட்களுக்குத் திறப்பதாக நிர்ணயித்துள்ளது. இன்று நடைபெறக்கூடிய கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை எடுத்துரைக்கவுள்ளதாகவும், மேலும் 24,000 கன அடி நீர் திறந்துவிட்டால் தான் பயிர்களைக் காக்க முடியும் என்பதை அழுத்தமான கோரிக்கையாக வைக்க உள்ளோம். ஆனால், காவிரி ஒழுங்கு முறை ஆணையம் 7000 கன அடி நீர் திறக்க பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசின் தரப்பு தேவையை வலியுறுத்துவோம். இப்போது நமக்குத் தேவையானது பயிரை காப்பாற்றுவதற்கான உயிர் நீர் அது நமக்குக் கிடைத்தால் போதும். பருவ மழை இல்லாமல் போனால் தண்ணீர் இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், நீர் அதிகம் இருக்கும் போது தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நீர் வழங்க வேண்டும் என்பதை வரையறுத்துள்ளனர்.