தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் - வழக்கு குறித்து விவரித்த துரைமுருகன்

முல்லைப் பெரியாறு அணை சம்பந்தமாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் விவசாயிகளின் நலன்களையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை விவகாரம்
முல்லை பெரியாறு அணை விவகாரம்

By

Published : Feb 1, 2022, 9:42 PM IST

சென்னை: கேரள தனிநபர்களால் உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “முல்லைப் பெரியாறு அணையில் காலவாரியான நீர்மட்டம் (Rule Curve), அணையின் வழிந்தோடி மதகின் கதவுகளை இயக்குதல் (Gate Operation Schedule), அளவு மானிகள் பொருத்துதல் (Instrumentation), அணைப் பாதுகாப்பு ஆகியவை குறித்து கேரள மாநில நான்கு தனிநபர்கள் 2020, 2021இல் உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.

இந்த வழக்குகளுக்குத் தேவையான மறுப்பு மனுக்களை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்குகள் 2021ஆம் ஆண்டு பிப்.15ஆம் தேதியன்று விவாதத்திற்காக வந்தபோது, வாதி பிரதிவாதிகள் ஏதேனும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய விரும்பினால் வரும் பிப்.04ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என ஆணையிட்டு, வழக்கை வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளது.

இவ்வழக்குகளில் தமிழ்நாடு, கேரள அரசுகள் முல்லைப்பெரியாறு மேற்பார்வைக் குழு, மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஆகியோர் பிரதிவாதிகளாகவும் (Respondents) சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு அதன் பதில் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் 2021ஆம் ஆண்டு பிப்.06, ஏப்.20, நவ.16, டிச.14 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு மேற்பார்வைக் குழுவும், ஒன்றிய நீர்வளக் குழுமமும் இணைந்து பதில் மனுக்களை 2021ஆம் ஆண்டு ஏப். 19, அக்.14ஆம் தேதிகளில் தாக்கல் செய்ததுடன், 2022 ஜன.27ஆம் தேதியில் மேலும் ஒரு நிலை அறிக்கை (Status Report) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவில், 2006ஆம் ஆண்டு ஜன.27, 2014ஆம் ஆண்டு மே 07 ஆகிய தேதிகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அணை எல்லாவிதத்திலும் பாதுகாப்பாக இருக்கிறதென்றும், எஞ்சிய பலப்படுத்தும் பணிகள், பராமரிப்பு மற்றும் செப்பனிடும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், இப்பணிகளை மேற்கொள்ள கேரள அரசு ஒத்துழைக்காமல் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் மேற்பார்வைக்குழு 14 முறை பார்வையிட்டதாகவும், அணைப் பாதுகாப்பாக உள்ளதாகவும் அதன் பதில்மனுவில் தெரிவித்துள்ளது. இருப்பினும் பதில் மனுவின் ஒரு பகுதியில் முல்லைப்பெரியாறு அணைப்பாதுகாப்பு குறித்து மறுஆய்வு தேவை எனக் குறிப்பிட்டுள்ளது, முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

உச்ச நீதிமன்றமே அதன் 2006ஆம் ஆண்டு பிப்.27, 2014ஆம் ஆண்டு மே 07ஆகிய தேதிகளில் வழங்கிய ஆணைகளில் எஞ்சிய பலப்படுத்தும் மற்றும் பராமரிப்புப்பணிகள் முடிக்கப்பட்ட பின்தான் பிரத்யேகமான நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்யவேண்டும் என்றும் அதன்பின் நீர்மட்டத்தை 152 அடிவரை உயர்த்தலாம் என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு பணிகளை முடித்தபின்தான் எந்த ஒரு ஆய்வும் செய்யப்பட வேண்டுமே தவிர, தற்போது அணையின் பாதுகாப்பை ஆய்வு (Review) செய்ய எந்த அவசியமும் இல்லை.

அணையின் நீர் கசிவு(Seepage), சுண்ணாம்பு வெளியேற்றம் (Lime Leaching)இவைகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகமிக குறைவாகவே உள்ளது. ஆகையால், எந்த வகையில் பார்த்தாலும் அணையின் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய தற்போது அவசியமில்லை என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாகும்.

ஒன்றிய நீர்வள குழுமத்தின் (CWC) நிலை அறிக்கைக்கான (Status Report) பதில்மனுவை (Response) உச்ச நீதிமன்றத்தில் 2022ஆம் ஆண்டு பிப். 04ஆம் தேதிக்குள் தக்க நடவடிக்கைக்காக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யும்.

நமது நிலைப்பாடு குறித்த தகுந்த வாதங்களை தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கும். தமிழ்நாட்டின் உரிமைகளையும் விவசாயிகளின் நலன்களையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:Budget 2022: மத்திய பட்ஜெட்டில் உள்ள 10 முக்கிய அம்சங்கள்

ABOUT THE AUTHOR

...view details