தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை - அமைச்சர் சி.வெ.கணேசன்! - northern state workers threaten

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில், அவ்வாறான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை: அமைச்சர் சி.வெ.கணேசன்
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை: அமைச்சர் சி.வெ.கணேசன்

By

Published : Mar 4, 2023, 9:00 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தமிழர்களை விட வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் பிரச்னை வருவதாக கருத்துகள் பரவி வருகிறது.

இதைத் தொடர்ந்து பீகாரைச் சேர்ந்தவர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகளும், வதந்திகளும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை, அவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெருதொழில் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள், பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வருகின்றன. அதில் பல மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள்.

அதேபோல், மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்த துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். மேலும் அந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வருபவர்களை நேசக் கரம் கொண்டு வரவேற்பது தான் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் நடைமுறை. விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற தமிழ்நாட்டு மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும் இந்த உடல் உழைப்புத் தொழிலாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால், இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில் சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மிகவும் மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. இதில் எந்த விதமான உண்மையும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் வட மாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள் என தெரிவித்தார்.

மேலும் தொழில் அமைதிக்கும், சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர் பெற்று விளங்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல, எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்?: தமிழ்நாட்டுக்கு விரைகிறது பீகார் அதிகாரிகள் குழு!

ABOUT THE AUTHOR

...view details