சென்னை:நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தேசிய அளவில் கிரிக்கெட், டென்னிஸ், நீச்சல், கேரம், சதுரங்கம், ஹாக்கி, கபடி உள்ளிட்ட 32 விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இவற்றில் மாநில அளவிலான போட்டிகளில் தகுதி பெற்றவர்களைத் தேசிய போட்டிகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் தேர்வு செய்து அனுப்புகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கையில் முன்னுரிமை உட்பட பல்வேறு சலுகை வழங்கப்படுகிறது.
இருப்பினும் கடந்த முறை தமிழக மாணவர்கள் ஒருவர் கூட தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது இதற்கு கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தீவிர கவனம் செலுத்தப்பட்டது. தேசிய அளவில் நடைபெறும் யோகா ஒலிம்பியாட் போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்ளத் தேர்வு செய்ய வேண்டும் என உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
இதனையடுத்து ,மாநில அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் சிறந்து விளங்கிய மாணவர்களை பள்ளிக்கல்வித்துறையால் தேர்வு செய்து. மத்தியப் பிரதேசத்தில் தேசிய அளவில் நடை பெற்ற யோகா போட்டியில் தமிழ்நாடு ஒலிம்பியட் மாணவ மாணவிகள் அணி, கடந்த ஜூன் 18,19,20 ஆகிய தேதிகளில் பங்கேற்றனர்.
ஒவ்வொரு பிரிவிலும் 4 மாணவர்கள் வீதம் 4 குழுக்களாக 16 மாணவர்கள் பங்கேற்று தேசிய அளவிலான யோகா போட்டியிலும் வெற்றி பெற்று சாதனைப் புரிந்துள்ளனர். இப்போட்டியில் 16 வயதுக்குட்பட்ட போட்டியில், 4 மாணவர்கள் வெள்ளிப்பதக்கத்தையும் , 4 மாணவிகள் வெண்கலப்பதக்கத்தையும் வெற்றுள்ளனர்.மேலும் 14 வயதுக்குட்பட்ட போட்டியில் 4 மாணவர்கள் வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளனர்.