தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிப்பு - அமைச்சர் சக்கரபாணி - chennai latest news

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கும் திட்டத்தில், குடும்ப அட்டையில் பெயர் மாற்ற வேண்டுமா? வேண்டாமா? என்ற விவகாரத்தில், யாரும் அச்சமடைய வேண்டாம், விரைவில் இதற்கான முடிவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணி

By

Published : Aug 3, 2021, 9:46 PM IST

சென்னை: கரோனா நிவாரண நிதி வழங்கல், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கும் திட்டம் ஆகியவை குறித்து, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த 99% குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள், ரூ. 4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில் பொது விநியோகத் திட்ட கடைகளில் தரமற்ற, நிறமற்ற அரிசி வழங்குவதாகப் புகார்கள் வந்துள்ளன.

40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

தரமற்ற அரிசி திரும்பப் பெறப்பட்டு, தரமான அரிசி வழங்கப்பட்டு வருகின்றன. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அரிசி, நெல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மூன்று மாதகாலத்தில் அரிசி, நெல் விவகாரத்தில் ஆயிரத்து 800 வழக்குகள் பதியப்பட்டு, ஆயிரத்து 859 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அரிசிக் கடத்தலில் ஈடுபட்ட 283 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 8 ஆயிரம் நியாய விலைக் கடைகள் சொந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றன.

வாடகை கட்டடத்தில் இயங்கிவரும் நியாய விலைக் கடைகளுக்குச் சொந்த கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ. 4 ஆயிரம் நிவாரணம் வாங்காத குடும்ப அட்டைதாரர்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு

அரிசி ஆலை முகவர்களை சந்தித்து கூட்டம் நடத்தி, விரைவில் தமிழ்நாட்டில் உள்ள ஆலைகளில் ஆகஸ்ட் 21க்குள் கலர் சார்டெக்ஸ் பொருத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கறுப்பு நிறம் கொண்ட எந்த அரிசியையும், நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் பயோமெட்ரிக் மூலம் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை கூடிய விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கும் திட்டத்தில், குடும்ப அட்டையில் பெயர் மாற்ற வேண்டுமா? வேண்டாமா? என்ற விவகாரத்தில் யாரும் அச்சமடைய வேண்டாம். இது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான முடிவினை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார்’ என்றார்.

இதையும் படிங்க:'261 இடங்களில் நடத்திய ஆய்வில் ரூ. 1.43 கோடி அபராதமாக வசூல்' - அமைச்சர் மூர்த்தி

ABOUT THE AUTHOR

...view details