சென்னை: இதுதொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கணிதம் படித்தும் கணக்குத் தெரியாத ஒருவரும் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்று கைதான ஒருவரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டதாக விவரம் அறியாமல் குறை கூறப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே பொங்கலின் போது ரூ.32 வாங்கிய பையை ரூ.62 வாங்கியதாக வாய் கூசாமல் கூறியவர். இப்படி, வகை தெரியாமல் கூறுகிறாரா அல்லது அவதூறு செய்ய வேண்டும் என்பதற்காகவே பேசுகிறாரா என்பது தெரியவில்லை. இருப்பினும் இவர்களைப் போன்றவர்களுக்காக இது தொடர்பாகச் சில விளக்கங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். வெள்ளம் உருகிவிட்டது என்று சில மாவட்டங்களிலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மிளகுக்குப் பதிலாக வேறு பொருள் கொடுத்ததாகவும் வந்த புகார்களையும் சில ஊர்களில் வேறு புகார்கள் வந்ததையும் ஊதிப் பெரிதாக்கி அவதூறு பரப்புவதற்கான சமூக ஊடகங்களில் பல போலிக்கணக்கு வைத்திருப்பவர்கள் சதி செய்தனர்.
சிறு தவறையும் பொறுத்துக் கொள்ளாத, சொந்தக் கட்சிக்காரர்களே தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கத் தயங்காத முதலமைச்சர் எங்களை அழைத்துக் கூட்டம் நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையிட்டதோடு அவரே பல பொது விநியோகத் திட்ட அங்காடிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள் தொடர்பாகச் சரியாகச் சோதனை செய்யாமல் அனுப்பியதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் தரக்கட்டுப்பாட்டு முதுநிலை மேலாளர், தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் மற்றும் கிடங்கு பொறுப்பாளர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அதோடு தரமற்ற பொருள்களை வழங்கி அவற்றை மாற்றிக் கொடுத்திருந்தாலும் அவற்றிற்காகவும் தாமதமாகப் பொருள்கள் வழங்கியமைக்காகவும் இதர காரணங்களுக்காகவும் விதிகளின்படி மொத்தம் 5 நிறுவனங்களுக்கு ரூ.7.04 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இத்தகைய அபராத விதிப்பு என்பது இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தண்டனை என்று விநியோகிப்பாளர்களே முறையிட்டார்கள்.