சென்னை: நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக நமக்கு சாதகமாக தீர்ப்பு வரும். மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் 10 நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்து, பின்னர் தலைமை அலுவலகத்தில் அனுமதி வழங்கப்படுவது வழக்கம் என்பதால், ஜல்லிக்கட்டு இந்தாண்டு நடைபெறும் பொழுது காளைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் கால்நடைத்துறை துணை நின்று செயல்படும்" எனத் தெரிவித்தார்.
’கால்நடை தடுப்பூசி தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவைத் தொடர்ந்து கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு உள்ள பகுதிகள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்த ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாதமே நமக்கு கிடைக்கவேண்டிய 90 லட்சம் டோஸ்களில் 60 டோஸ் வழங்கப்படும் என ஒன்றிய கால்நடைத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கால்நடை நோய் தாக்கம் இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக 5 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. மேலும் அண்டை மாநிலங்களிலிருந்து கால்நடைகள் மற்றும் பறவைகள் கொண்டு வரும் வாகனகங்கள் முழுமையான பரிசோதனை முடிந்து பின்னர், பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன’ எனவும் அமைச்சர் கூறினார்.