சென்னை:வேளச்சேரி லயன்ஸ் கிளப் சார்பாக தேசிய வருவாய் வழி கல்வி உதவித்தொகைத்திட்டத் தேர்வுக்கு தயாராவதற்காக "படிப்பறிவுத் திறன் தேர்வுக்கான" புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(அக்.17) வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தப் புத்தகத்தை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 67 பேர் இணைந்து தயாரித்துள்ளனர்.
மிக அழகாகவும், ஆக்கப்பூர்வமாகவும் வடிவமைத்துள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அந்தப்பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மூலம் ஒரு பள்ளிக்கு 10 புத்தகம் வழங்கப்படும்.
யுபிஎஸ்சி தேர்வில் தொடக்கக் கல்வி பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்விலும் கேட்கப்படுகின்றன.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை காட்டிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்லிருந்து அதிக கேள்விகள் கேட்கப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுத்திறன் பயிற்சி
ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர். குறிப்பாக, தேசிய திறனறிவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும், தேர்ச்சி பெறுவதற்கு காரணமாக இருக்கும் ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்க வேண்டும், பிடிஎப் வடிவில் இருக்கும் புத்தகத்தையும் அரசின் மூலம் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுத் திறன் குறைவாக இருப்பதால், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய சிரமமாக இருப்பதாகத் தெரிவித்தனர். பள்ளி நேரத்திற்குப் பின், அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கிலப் பேச்சுத்திறன் (spoken English) பயிற்சி அளிக்க, பள்ளிக்கல்வித்துறையின் கூட்டத்தில் ஆலோசித்து, முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்.