தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை - அன்பில் மகேஷ் அறிவிப்பு! - கஸ்தூரிபா காந்தி பாலிகா

Anbil Mahesh: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Anbil Mahesh
அன்பில் மகேஷ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 2:24 PM IST

சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளைக் கண்டறிதல் மற்றும் அவர்களுக்கான தனிநபர் திட்டத்தினை வடிவமைத்து, சிறப்பு கல்வி மற்றும் சிகிச்சைகளை வழங்குவதற்கான செயலியை அறிமுகம் செய்தும், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயாவில் (NSCBAV) பயிலும் மாணவர்களுக்கு, நேரடியான பயனாளர் பரிவர்த்தனை செய்யும் முறையை துவக்கி வைத்தும், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான இணையவழி குறைதீர் புலத்தையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமாெழி, "ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் உடல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதனால், அவர்களுடைய குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதனை களைவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாணவர்களிடையே ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அதனைக் கண்டறியவே 'நலம் நாடி' எனும் செயலி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்றுநர்கள் இச்செயலியைப் பயன்படுத்தி, குறைபாடுகளை எளிதில் கண்டறிவர். இதன் மூலம் மாணவர்களுக்கு பிறக்கும் போதே ஏற்பட்டுள்ள குறைபாடுகள், வளர்ச்சியில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் பிற குறைபாடுகள் ஆகியவை ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகின்றன.

பள்ளிகளில் ஆசிரியர்களால், இக்குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு, பின்னர் சிறப்பு பயிற்றுநர்களால் இந்தச் செயலியைப் பயன்படுத்தி 21 வகையான குறைபாடுகளுக்கு முழுமையான பரிசோதனை மேற்கொள்ள இயலும். கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா எனும் சிறப்புத் திட்டம் அரியலூர், தருமபுரி, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை, சேலம், பெரம்பலூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களில் பெண் கல்வியில் பின் தங்கியுள்ள 44 ஒன்றியங்களில், 61 KGBV உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் முறையான பள்ளிகளிலிருந்து இடைநின்ற அல்லது பள்ளியில் சேராத 10 வயது முடிந்த 14 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டு, கல்வி பயின்று வருகின்றனர். மேலும் அரியலூர், தருமபுரி, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை, சேலம், பெரம்பலூர், திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில், 44 பெண்கள் விடுதிகள் இயங்கி வருகின்றன.

இவ்விடுதிகளில் 9 – 12ஆம் வகுப்பு மாணவிகள் தங்கி, விடுதிக்கு அருகில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். அதேபோல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயா (NSCBAV) உண்டு உறைவிடப் பள்ளிகள் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், இராமநாதபுரம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, பெரம்பலூர், தருமபுரி மற்றும் திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களில் 15 உண்டு உறைவிடப் பள்ளிகளும், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் 3 விடுதிகளும் இயங்கி வருகின்றன.

கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் பெண்கள் விடுதிகள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் ஆகியவற்றில் பயின்று வரும் மொத்தம் 9870 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ஒரு மாதத்திற்கு ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது. காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு ஜனவரி 2024 ஆம் ஆண்டுமுதல் மாணவரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் தகுதிகாண் பருவம் முடித்தல், உயர் கல்வி பயில அனுமதி கோருதல், தேர்வு நிலை, சிறப்பு நிலை அனுமதிக்க கோருதல் போன்ற கருத்துருக்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்படும் பணியிடம் நிரப்ப முன் அனுமதி கோருதல், பணி நியமனத்திற்கு ஒப்புதல் கோருதல் போன்றவற்றை பள்ளி நிர்வாகம் அறிந்து கொள்வதற்கும், பல்வேறு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை உயர் அலுவலர்கள் கண்காணித்திடவும், விரைந்து தீர்வு காணும் வகையில் emis.tnschools.gov.in இணையதளத்தில் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகங்களின் குறைகளை களைந்திட ஏதுவாக புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசு நிதி உதவி பெறும் 8337 பள்ளிகளின் கோரிக்கைகள், குறைதீர் மனுக்களின் மீது தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஜாக்டோ ஜியோ போராட்டம் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும்.

பொதுத்தேர்வு அட்டவணைகள் குறித்த அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், ஏற்கனவே வெளியிடப்பட்ட 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை" என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்; தமிழகத்தில் 92% பேருந்துகள் இயக்கம்!

ABOUT THE AUTHOR

...view details