சென்னை: விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளை பூங்கொடுத்து கொடுத்து வரவேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளியின் நூலகம், சத்துணவு சத்துணவு கூட, கழிப்பறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் ,நோட்டு புத்தகம், சீருடை, வரைபடம், ஜாமென்ட்ரி பாக்ஸ், ஷூ சாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழ்நாடு முழுவதும் 8,340 நடுநிலை பள்ளிகள், 3,547 உயர்நிலை பள்ளிகள் 4,221 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 16,108 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இன்று கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 46,22,324 மாணவர்கள் வந்துள்ளனர். பள்ளிக்கு வந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
பள்ளிகளில் அதிகப்படியான தேர்ச்சி விகிதத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டு அதிக தேர்ச்சி விகிதத்தை காட்ட வேண்டும். பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
நானும் காலையில் பள்ளியில் சுற்றிப் பார்த்தேன். குடிநீர் கழிவறை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி வகுப்பறைகளில் முறையாக பள்ளி மாணவர்களின் நலனுக்கு தேவையானதை ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம். முதலாம் வகுப்புக்கு 1,31,000 மாணவர்கள் இதுவரை சேர்ந்துள்ளனர்.
முதல் முறையாக பள்ளி தொடங்கிய நாளே கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது முதல் 14 மாதங்கள் கழித்து வழங்கப்பட்டு வந்த கல்வி உபகரணங்கள் தற்போது முதல் நாளிலேயே வழங்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கப்பட்டு வர வர ஜூலை மாத இறுதிக்குள் முழு சீருடையும் வழங்கப்படும்.