பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வருகை பதிவு குறைந்த மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் சென்னை: அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் வட்டாரவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்றனர். அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற 152 மாணவர்கள் மாநில அளவிலான மெய்யறிவு கொண்டாட்டம் என்ற பயிலரங்கத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்களுக்கான மெய்யறிவு கொண்டாட்டம் இன்று முதல் வரும் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கொண்டாட்டத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பள்ளி மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்காக பல்வேறு வகையான போட்டிகள் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் திறனை கண்டறியும் வகையில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் மாநில அளவிலான பைல் அரங்கேற்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இன்று முதல் எட்டாம் தேதி வரை மெய்யறிவு கொண்டாட்டம் என்ற தலைப்பில் அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடுகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீஸ் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த தகவல்கள் இங்கிருந்து திருடப்படவில்லை என கூறப்பட்டாலும் அதில் தவறு நடந்தது கண்டறியப்பட்டால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வெயில் காரணமாக ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்துவது குறித்து பரிசளிக்கப்படும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தனியார் பள்ளிகளை போல் தேதி குறிப்பிட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதில்லை, அது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு தொடர் நிகழ்வு என்பதால் தேர்வுகளுக்கு பிறகு சேர்க்கை குறித்த அந்தந்த மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு பள்ளி மாணவர்களில் சேர்க்கை குறித்து முடிவு எடுத்துக் கொள்ளலாம்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி தேர்வு ஹை டெக் லேப் மூலம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. பொதுத் தேர்வு முடிந்த பின்னர் நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தினமும் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வழங்கப்படும். பத்தாம் வகுப்பில் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து தேர்வு எழுத வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களுக்கு மட்டும் வருகை பதிவில் ஓராண்டிற்கு சிறப்பு சலுகை அனுமதிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் வழக்கமான வருகை பதிவு முறை கடைபிடிக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்து பள்ளி மேலாண்மை குழு மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி மே ஐந்தாம் தேதி வெளியாகும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மே மாதத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு- டிஆர்பி தலைவர் தகவல்!