சென்னை: அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பினை மேம்படுத்த பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டுத் திட்டதில் 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் மத்திய அரசின் அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மற்றும் நபார்டு போன்றவற்றின் மூலம் நிதி பெற்று கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அதிகளவு நிதியாக 30 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளிக்கல்வித்துறைக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அதேநேரம், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பினை மேம்படுத்தும் வகையில் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்ற திட்டமும் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தத் திட்டத்திற்கு பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் நிதி வழங்கலாம் என அரசு தெரிவித்திருந்தது. இருப்பினும், எதிர்பார்த்த அளவிற்கு நிதி வரவில்லை. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு ஒன்றை வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பில், “கல்வி என்பது நம் இரு கண்கள் போல. இவ்வுலகைக் காண, நம் புரிதலை வளர்த்துக் கொள்ள, புதிய மனிதர்களைச் சந்திக்க, புதியப் புதிய இடங்களுக்குப் பயணப்பட நம்மை கல்விதான் அழைத்துச் செல்லும். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் கல்வி கற்றவர்கள், இன்று உலகின் வெவ்வேறு நாடுகளில் வசிக்கிறீர்கள். உள்ளூரில் கற்ற கல்வி மூலம் கிடைத்த அறிவைப் பயன்படுத்தி, இன்று கை நிறைய ஊதியம் பெற்று, குடும்பத்தை நல்ல முறையில் பேணி வரும் பலர் இருக்கிறீர்கள். உங்களில் வேறு பலர் நல்ல நூல்களை வாசித்து, உங்கள் அறிவை வளர்த்துக் கொண்டிருக்கலாம்.
நீங்கள் புத்திசாலிகளாக, அறமிக்கவர்களாக இப்போது இருப்பதற்கு, உங்களிடம் நல்லியல்புகள் வளர்வதற்கு நீங்கள் கற்ற கல்வி உங்களுக்கு உதவி இருக்கும். இன்று நாம் நல்ல நிலையில் இருப்பதற்குக் காரணம், நாம் கற்ற கல்வியே. நம்மில் பலர் அரசுப் பள்ளிகளிலோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ படித்தவர்களாக இருப்போம். ஊரில் நாம் படித்த பள்ளி எப்படி இருக்கிறது என உங்களுக்கு அவ்வப்போது யோசனை வந்து சென்றிருக்கக் கூடும்.