12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்! சென்னை:அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் சென்னை மாநகர நூலக ஆணைக்குழுவின் அலுவலகத்தை திறந்து வைத்தும், முதல் குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமாெழி ஆலோசனைகளை வழங்கினார். மேலும் மாநகர நூலக ஆணைக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு புத்தகத்தை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "கவிஞர் மனுஷ்யபுத்திரன் தலைமையில் சென்னையில் மாநகர நூலக ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவின் ஆலோசனைகளை பெற்று வாசகர் வட்டத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகரில் 162 நூலகங்கள் உள்ளன. இதில் எவ்வாறு புதிய திட்டங்களை செயல்படுத்தலாம் என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளோம்.
வாசகர் வட்டத்தை அதிகரிப்பது, நூலக மேம்பாடு, கட்டமைப்பு, நூலக அலுவலர் நியமிப்பது உள்ளிட்டவை குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்வர்கள். பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ஏற்கனவே மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கம் ஏற்பட்டுத்தப்பட்டு வருகிறது. இலக்கிய நூலக துறை சார்பில் யூ-ட்யூப் சேனல் தொடங்கப்படவுள்ளது" என்றார்.
மேலும், "மதுரை கலைஞர் நூலகம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. நூலகத்தில் வைக்க ஒன்றேகால் லட்சம் புத்தகங்கள் வாங்கப்படுள்ளது. ஜூன் 3-ஆம் தேதி திருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். எனவே அதன் பின்னர் மதுரை கலைஞர் நூலகம் திறப்பதற்கான தேதி முதலமைச்சரிடம் பெறப்பட்டு, திறக்கப்படும்.
12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை நீட் தேர்வுக்கு பின்பாக வெளியிடுவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். மாணவர்களுக்கு மன ரீதியிலான அழுத்தத்தை கொடுக்காத வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதுகுறித்து பல்வேறு சங்கங்களும் வலியுறுத்தின. எனவே நீட் தேர்விற்கு பின்னர் முடிவுகள் வெளியிடப்படும்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், "பள்ளி மாணவர்கள் தேர்வுகளை எழுதி முடித்து விட்டு விடுமுறையில் உள்ளனர். அவர்களுக்கு இது விடுமுறைக்காலம் ஆனால் பெற்றோர்களுக்கு விடுமுறைக்காலம் கிடையாது. பள்ளி மாணவர்கள் நீர் நிலைகளுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டி பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.கோடைக்காலத்தினை பயனுள்ள வகையில் மாணவர்களுக்கு உருவாக்கித்தர வேண்டும். கம்ப்யூட்டர், ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்றவற்றை கற்றுக் கொள்ள சேர்த்து விடலாம். மாணவர்களுக்கு படிக்கும் பழக்கத்தை அதிரிக்கும் வகையில் நூலகங்களுக்கும் அனுப்பலாம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஸ்டாலினை தோளில் சுமப்பதில் வெட்கமில்லை" - அமைச்சர் துரைமுருகன் உணர்ச்சி பொங்க விளக்கம்!