சென்னை:தலைமை செயலகத்தில் தமிழ்மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வில் வெற்றி பெற்ற 1500 மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் ஊக்கத்தொகை குறித்து அறிவிக்கும் நிகழ்ச்சி நேற்று (டிச.1) நடந்தது. அப்போது முதலில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 'தமிழகத்தில் உள்ள 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது.
மாதம் ரூ.1500:இதில், அரசுப்பள்ளி மாணவர்கள் 1,18,057 பேர், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 54,247 பேர், தனியார் பள்ளி மாணவர்கள் 78,400 பேர் என மொத்தம் 2,50,731 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் அரசுப் பள்ளிகளில் படித்த 967 பேருக்கும், அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் 123 பேருக்கும், தனியார் பள்ளி மாணவர்கள் 410 பேருக்கும் என 1500 மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1500 ஊக்கத்தொகை வழங்கவுள்ளோம்.
தேர்வு முடிவுகள்:அரசுத் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தை சேர்ந்த அபிநயா 100/97 மதிப்பெண் பெற்று முதல் இடத்தில் உள்ளார். அதிகமாக மாணவிகளே தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
கோரிக்கை: சமீபத்தில் அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பார்வையிட்டபோது அங்குள்ள பணியாளர்களே மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இதே போன்று, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்க முன் வர வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளேன்.