சென்னை: பரங்கிமலையில் உள்ள மான்ஃபர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், தகரி சிலம்பாட்ட கழகம் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில சிலம்ப போட்டியை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி இன்று (ஜூன் 10) தொடங்கி வைத்தார்.
அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, 'சிலம்பம் விளையாட்டை பழகுவதன் மூலம் மாணவர்கள் கவனம் செலுத்தும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என்றார். மாணவர்கள் படிப்பு படிப்பு என்று இருந்து விடக்கூடாது என்ற அவர், பெற்றோர்கள் சிலம்பம் போன்ற விளையாட்டுகளில் தங்கள் குழந்தைகளை ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குறிப்பாக, தங்கள் குழந்தைகளை பெற்றோர் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது' என்று அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு மாணவர்கள் கலந்து கொள்ளாதது தவறுதான் என்றும் அந்த தவறை ஒப்புக்கொள்கிறோம் என்றார். இந்த விவகாரத்தில், முறையான தகவல் பரிமாற்றம் இல்லாததன் காரணமாகவே, தமிழ்நாடு மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளாத சூழல் உருவாகியுள்ளதாக வருத்தினார்.
மேலும், தவறு செய்த உடற்கல்வியல் ஆய்வாளர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இணை இயக்குனர் ஒருவருக்கும் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், வரும் 2024 ஆண்டில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு மாணவர்கள் நிச்சயம் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.