சென்னை:தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று ( ஏப். 06) முதல் வரும் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 4 லட்சத்து 74 ஆயிரத்து 543 மாணவர்கள், 4 லட்சத்து 63 ஆயிரத்து 522 மாணவிகள், இரண்டு திருநங்கைகள் என மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 பேர் எழுத பதிவு செய்துள்ளனர்.
அதன்படி தமிழ்நாட்டில் இன்று ( ஏப்.06 ) பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆப்சென்ட் ஆன மாணவர்கள் குறைவாகவே இருக்கும் என நம்புவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொதுத்தேர்வினை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகளும் என ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் எழுதி உள்ளனர்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை காலையில் சென்னை லேடி வில்லிங்டன் பள்ளியில் நேரில் சென்று ஆய்வு செய்தேன். அந்தப் பள்ளியில் படித்த 56 மாணவர்களில் ஒரு மாணவர் வரவில்லை. 55 மாணவர்கள் தேர்வினை எழுதினர். மேலும் பொதுத்தேர்வினை பள்ளியில் படித்த அனைத்து மாணவர்களும் எழுத வேண்டும் என்பதற்காக ஏற்கனவே பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.