தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்..! அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு..! - பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கம்

Teachers hunger strike: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கத்தினர் பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும், உங்களுக்கான பணியை நாங்கள் செய்கிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Minister Anbil Mahesh ordered the teacher to stop the protest and join Ennum Ezhuthum training
அமைச்சர் அன்பில் மகேஷ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 8:27 PM IST

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் சங்கம், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கம், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் என மூன்று சங்கங்களும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் ஒரு வாரமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை இரண்டு மூன்று நாட்களாக முதலமைச்சரிடம் தெரிவித்தோம். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி ஆசிரியர் சங்கங்களின் ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

"சம வேலைக்கு சம ஊதியம்" கோரிக்கையில், ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி பல்வேறு துறைகளில் 01/06/2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஏற்பட்ட ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை கலைவதற்காக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது, அது விரைவில் அரசிற்கு பரிந்துரைகளை வழங்கும். (நிதித்துறை செயலர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் )மூவர் குழு இன்னும் மூன்று மாதத்தில் அறிக்கையை தயார் செய்து வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அரசின் மிக முக்கியமான திட்டமான எண்ணும் எழுத்தும் திட்டத்தின் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. அவற்றில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு பள்ளி திறந்ததும் பள்ளிகளுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது என்றார்.

தொடந்து அவர், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர் தற்போது பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 10,359 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. நிதி நெருக்கடி இருந்தாலும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு 2500 ரூபாய் தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டு 12,500 ரூபாய் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது. இவ்வாசிரியர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான காப்பீட்டுத் தொகையையும் அரசே ஏற்கும். எனவே இதனை ஏற்று கைவிட்டு பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணி நாட்டுனர்களுக்கு உச்ச வயது வரம்பை பொது பிரிவினருக்கு 53 எனவும் இதர பிரிவினருக்கு 58 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம் செய்ய ஏதுவாக 171 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு முறையான ஊதியம் வரைமுறை செய்யும் அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

பொது நூலக துறையில் பணியாற்றி வரும் 446 பேருக்கு மூன்றாம் நிலை நூலகர்களுக்கான பணி வழங்கும் அரசாணை விரைவில் வெளியிடப்படும். ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும் தமிழக முதலமைச்ச நிதிநிலைமைக்கு ஏற்றவாறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்.

முதலமைச்சரின் மீது நம்பிக்கை வைத்து போராடாமல் இருப்பவர்களுக்காகவும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுடைய உணர்வுகளை மதிக்கும் விதமாக இன்றைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை கருணை உள்ளத்துடன் பரிசளிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் நினைக்கிறார். ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் அனைத்தும் வரும் காலங்களில் பரிசீலனை செய்யப்படும்.

ஆசிரியர்கள் தங்களை வருத்திக் கொள்ள வேண்டாம், அந்த மன உளைச்சலை தமிழக முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறையை சார்ந்தவர்களுக்கும் வழங்காமல் நீங்கள் உங்களுடைய பணியை செய்யுங்கள், உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கவனித்து செய்ய அரசு தயாராக உள்ளது.

ஆசிரியர்கள் தங்களது போராட்டங்களையும், தங்களை வருத்திக் கொள்கின்ற நிகழ்வையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். மாணவச் செல்வங்களுக்காக பள்ளிகளுக்கு சென்று பாடம் நடத்தும் பணி மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கான பயிற்சியை பெறும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு இருக்கும் நிதி நெருக்கடியிலும் தங்களால் என்ன செய்ய முடியுமோ அதனை முதற்கட்டமாக செய்துள்ளோம். ஆசிரியர் பெருமக்கள் தமிழக முதல்வரை நம்ப வேண்டும். உங்களது பணியை நீங்கள் செய்யுங்கள். உங்களுக்கான பணியை நாங்கள் செய்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

ABOUT THE AUTHOR

...view details