சென்னை:தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்ட துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஞ்ஞானிகள் எம்.எஸ்.சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நவீன அறிவியல், விஞ்ஞானம் பற்றிய விழிப்புணர்வு, பயிற்சியை ஏற்படுத்தும் நிகழ்ச்சியை அமைச்சர் இன்று(செப்.26) தொடங்கி வைத்தார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டம்
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், "2002ஆம் ஆண்டு முதல் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சியை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து அறிவியல் பயிற்சி வழங்க உள்ளது.
ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தை, மாவட்டந்தோறும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கல்வித்துறையின் மூலம் நடத்தப்படும் அறிவியல் கண்காட்சியிலும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைப் பயன்படுத்தி, மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்புத் திட்ட நிதியின் மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி வழங்கப்படுகிறது.
அனைத்து தரப்பினரின் கருத்தை அறிந்து முடிவு
கரோனா தொற்று பாதிப்பில் பள்ளிகளை திறக்க ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வகையில் செயல்படுகிறது. அந்தந்த மாநில மக்களின் மனநிலைக்கேற்ப அரசுகள் முடிவெடுத்து வருகிறது.
கரோனா தொற்றைக் காட்டிலும் கற்றல் குறைபாடே மிகப்பெரிய தொற்றாக இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது. பெற்றோர்கள், மாணவர்கள், தனியார் பள்ளி நிர்வாகங்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை உள்ளடக்கி மாணவர்களின் உடல்நிலை பாதிக்காமல்தான் அரசு முடிவெடுக்கிறது. அனைத்து தரப்பினரின் கருத்தை அறிந்து, அதன் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பு பற்றி முதலமைச்சர் முடிவு எடுப்பார்.
மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை
ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அரசின் அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்பும் அதில் இடம் பெற்று வருகிறது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கருத்துகளை கேட்டறிந்து அதன் அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்துள்ளோம். மருத்துவ வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையில் முதலமைச்சர் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பார்.
9 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கடந்த செப்.1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் கட்டாயமாக பள்ளிக்கு வரவேண்டியது அவசியமில்லை" என்று தெரிவித்தார். இதனிடையே மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாசடையும் காவிரி ஆறு - கண்டுகொள்ளாத அலுவலர்கள்