அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு சென்னை:மிக்ஜாம் புயல் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதனால் சென்னை மாநகரமே பெரும் பாதிப்புக்குள்ளானது. மின்சாரம், உணவு, உடைகள் என அத்தியாவசியப் பொருட்கள் இன்றி பொதுமக்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில், புயலால் பெரிதும் பாதிக்கபட்ட அம்பத்தூரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட கொரட்டூரில் ஓரிரு தெருக்களை தவிர்த்து, அனைத்து இடங்களிலும் மழை நீர் அகற்றப்பட்டு விட்டது. இந்நிலையில், இந்த பேரிடர் காலத்திற்கென அம்பத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் தொகுதிகளுக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கபட்ட பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேற்று (டிச.8) 4வது நாளாக அம்பத்தூரில் மழைவெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வடக்கு கொரட்டூர் தாதாங்குப்பத்தில் உபரிநீர் வெளியேறும் பகுதி, மழை வெள்ளம் சூழ்ந்துள்ள கொரட்டூர் சுரங்கப்பாதை, கொரட்டூர் ஏரி, ஜீரோ பாயிண்ட், கழிவு நீர் உந்து நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வீட்டு வசதி வாரியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள கழிவு நீரில் இறங்கி, வீடு வீடாகச் சென்று குறைகளை கேட்டறிந்தார்.
இதனையடுத்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான பால் பாக்கெட், பிரட், அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மேலும் இந்த ஆய்வில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் மண்டலக் குழு தலைவர் பி.கே.மூர்த்தி, பகுதி செயலாளர் நாகராஜ், அம்பத்தூர் மண்டலத்திற்கு தனியாக நியமிக்கபட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். ஒரிரு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரையும் இன்றைக்குள் அகற்றிவிட வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:த்ரிஷா உள்பட மூவருக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு மன்சூர் அலிகான் மனு!