சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள் பற்றித் தெரிந்து கொள்வதற்காகக் கல்லூரி களப்பயணத்தைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போதுமானதாக இருக்கவில்லை. எனவே, மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் போதே விழிப்புணர்வு ஏற்படுத்த “கல்லூரி களப்பயணம்” என்ற திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பயணம் மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்குக் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட உள்ளது.
உங்களை விட உங்களைப்பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகம் சிந்திக்கிறார். கடந்த ஆண்டுகளில் எல்லாம் மதிய உணவுத் திட்டம் மட்டும் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது முதலமைச்சரின் சீரிய சிந்தனையில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும், 12 ஆம் வகுப்பிற்குப் பின்னர் அவர்கள் எங்குச் சென்று படிக்கின்றனர் என்பது குறித்தும் அரசு அக்கறையுடன் கவனிக்கின்றது. ஒவ்வொரு மாணவர்களுக்கும் தந்தையாக, தாயாக துறையைச் சார்ந்த ஒவ்வொருவரும் இருக்கிறோம்.
12 ஆம் வகுப்பு படிக்கும் போதே நாம் உயர்கல்விக்காகச் சேர வேண்டிய 3 கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியை நம்பி அனுப்பி வைக்க வேண்டும். மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களாக மாற்ற முடியுமோ, இல்லையோ என்பது தெரியாது. ஆனால் சமூகத்தில் நடமாடக்கூடிய அளவிற்குச் சிறந்த மனிதர்களாக எங்களால் உருவாக்க முடியும்.
பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்றிலிருந்து நான்கு மாதங்கள் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பொழுதுபோக்கில் கவனம் செலுத்தாமல் அக்கறையுடன் படிக்க வேண்டும். கண்துஞ்சாமல் படிப்பில் கவனம் செலுத்தி பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற வேண்டும்.
நீங்கள் உங்களது சந்தேகங்களை ஆசிரியர்களிடம் தயங்காமல் கேளுங்கள். 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கக்கூடிய படிப்புகள் அங்கு இருக்கக்கூடிய சிறப்புகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பேராசிரியர்கள் மற்றும் அங்குப் பயிலும் மாணவர்களிடம் கேட்டு அறிந்து பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து திருப்பூர் சுப்ரமணியம் ராஜினாமா!