சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணிக்கு வெளியானது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, “10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ போன்ற தொழில்நுட்பப் படிப்புகளில் சேர்வது கண்காணிக்கப்படும். மதிப்பெண்கள் குறைவாக உள்ள மாணவர்களுக்கு பெற்றோர்கள் அழுத்தம் தரக் கூடாது என்றார்.
80 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் என்னை சந்தித்தார். கால அட்டவணைப்படி இல்லாமல், வேகமாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பணியிடத்திற்கான பட்டியலை வருகிற திங்கள்கிழமை முதலமைச்சரிடம் அளிப்போம்.
அவர் தேர்வு செய்பவரை பணியில் அமர்த்துவோம். கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது. பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களை பெற்றோர்கள் ஊக்கப்படுத்திட வேண்டும். மேலும், தோல்வி அடைந்த மாணவர்களை துணைத் தேர்வு எழுத வைக்க பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.