நெஞ்சுவலி காரணமாக சென்னை, வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார். அவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விவேக் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே முழு பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவரும், மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணியின் மாநிலச் செயலருமான சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "கரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பு வரை ஆரோக்கியமாக இருந்த சின்னக் கலைவாணர் விவேக், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை காலமானார் எனும் தகவலறிந்து துயருற்றோம். நன்றாக ஆரோக்கியமாக இருந்த அவருக்கு 100 விழுக்காடு இருதய அடைப்பு இருந்ததாக மருத்துவர்கள் கூறியிருப்பது நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
கரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களை மறைக்கவே மத்திய, மாநில அரசுகள் இவ்வாறு கபட நாடகம் ஆடுகின்றனவா என்கிற சந்தேகம் எழுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை. பல கோடி மக்களை மகிழ்வித்த கலைஞனின் அகால மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே முழு பொறுப்பேற்க வேண்டும். அவரது மறைவிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பிலும், மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:வைகை மண்ணின் மைந்தனும்... அப்துல் கலாம் காதலனும்!