தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் பொன்னுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், 'ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனங்களான டோட்லா, ஹெரிடேஜ், ஜெர்சி, சங்கம், திருமலா மற்றும் சீனிவாசா, ஜேப்பியார், கோவர்த்தனா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
முன்னணி தனியார் பால் நிறுவனங்களான டோட்லா, கோவர்த்தனா, சங்கம், ஹெரிடேஜ், ஜெர்சி உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை உயர்த்தி விட்ட நிலையில் வரும் 2ஆம் தேதி முதல் தங்களின் பாலிற்கான விற்பனை விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரையிலும், தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளன. தனியார் பால் நிறுவனங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள இதர அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் பாலுக்கான விற்பனை விலையை வரும் வாரத்தில் உயர்த்திட முடிவு செய்துள்ளன.
தமிழ்நாடு அரசின் ஆவின் பால் நிறுவனம் விலை உயர்வை அறிவித்தது. அதே போல் தனியார் நிறுவனங்களும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குகிறோம் என அறிவித்துள்ளதால், அடிப்படையில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிப்படைகின்றனர். 2019ஆம் ஆண்டில் மட்டும் தற்போது மூன்றாவது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் தன்னிச்சையாக மீண்டும் பால் விற்பனை விலையை உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வை தனியார் பால் நிறுவனங்கள் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.