சென்னை:இது குறித்து நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில், "ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து ஆவினுக்கு அனுப்பப்படும் பாலில் கலப்படம் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின. குழந்தைகள் அருந்தும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலில் கலப்படம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் முகவர்கள் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வலியுறுத்தினர்.
காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றும் ஊழியரும், அவரது குடும்பத்தினரும் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால் காஞ்சிபுரம் - திருவள்ளூர் ஒன்றிய பொதுமேலாளர் ரமேஷ்குமார் மற்றும் அம்மாவட்ட துணைப் பதிவாளர்கள் (பால்வளம்), தரக்கட்டுபாட்டு அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் துணையும், ஒத்துழைப்பும் 100% இல்லாமல் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை.
அதனால் இவ்விவகாரத்தில் பால் கலப்படம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உடனடியாக உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசும், பால்வளத்துறை அமைச்சரும் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குனரும் தொடர்ந்து அமைதி காத்து வந்தனர்.
காக்களூர் பால் பண்ணைக்கு கிராமப்புற கூட்டுறவு சங்கங்களில் இருந்து பால் கொண்டு செல்லும் வாகனத்தின் ஓட்டுநராக பணியாற்றும் ஆவின் ஊழியரான ராஜ்குமாரின் தந்தை தயாளன் என்பவருக்கு சொந்தமாக மாடுகளே இல்லாத நிலையில், கிராம அளவிலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் போலியான உறுப்பினராக பதிவு செய்து ஆவினுக்கு பால் வழங்குவதற்காக ஆந்திராவில் உள்ள தனியார் பால் பண்ணையாளர்களிடம் இருந்து குறைந்த அளவு பாலினை வாங்கி அந்த பாலில் இருந்து கொழுப்பு சத்தை திருடி அதில் பால் பவுடரை கலப்படம் செய்து ஆவினுக்கு வழங்கியதும், இந்த முறைகேடுகள் நீண்ட காலமாக நடைபெற்று வந்திருப்பதாகவும் வருகின்ற தகவல்கள் கூடுதல் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
ஆவின் பால் "புதியது", "தூயது", "தாய்ப்பாலுக்கு நிகரானது" என தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் ஆவின் பாலின் தரம் குறித்து பெருமையாக விளம்பரம் செய்து கொண்டிருக்க, "வேலியே பயிரை மேய்ந்தது" போல காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றும் ஊழியரே தனது தந்தையை போலியாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக்கி, அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து பால் வாங்கி அதில் கலப்படம் செய்து தரம் குறைந்த பாலினை நீண்ட காலமாக ஆவினுக்கு வழங்கி வந்திருப்பதை எவரும் அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாது.
தமிழகம் முழுவதும் 27 மாவட்ட ஒன்றியங்களில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில், சுமார் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடமிருந்து, சுமார் 27 லட்சம் லிட்டருக்கும் மேல் தினசரி பால் கொள்முதல் செய்யப்பட்டு வரும்போது ராஜ்குமார், தயாளன் போன்றவர்களின் செயல்பாடுகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் "ஒரு டம்ளர் பாலில் சிறு துளி விஷம் கலந்தாலும் ஒட்டுமொத்த பாலும் விஷமாகி விடும்" என்பதைப் போல ஆவினின் ஒட்டுமொத்த தரமும், நற்பெயரும் கலங்கமாகி விடும்.
தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் பாலில் கலப்படம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட ஆவின் ஊழியர் ராஜ்குமார், அவரது தந்தை தயாளன், அதனை தடுக்க தவறிய அல்லது அந்த முறைகேடுகளுக்கு துணை போன காஞ்சிபுரம்- திருவள்ளூர் ஒன்றிய பொதுமேலாளர் ரமேஷ்குமார் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட துணைப் பதிவாளர்கள் (பால்வளம்), தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்டோரை கைது செய்து உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க:குறட்டை பிரச்னைக்கு இதுவும் காரணமா? - மூக்கு எலும்பு வீக்கத்தால் வரும் தொல்லை