தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 13 லட்சம் லிட்டரும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 12.3 லட்சம் லிட்டரும் என ஆக மொத்தம் தமிழகத்தில் நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து 'ஆவின் நிறுவனம் வரலாற்று சாதனை' படைத்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
ஏனெனில் மேற்கண்ட விற்பனை இலக்கான நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் என்பதை கடந்த மே மாதம் 8ஆம் தேதியே எட்டியதாக ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐஏஎஸ் ஊடகங்கள் வாயிலாக அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆவின் நிறுவனத்தில் மே மாதம் எட்டப்பட்ட விற்பனை இலக்கு சாதனையை மீண்டும் தற்போது (ஜூலை மாதம்) நிகழ்ந்திருப்பதாக கூறுவது ஆவின் நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதையும், அதன் மூலம் மிகப்பெரிய அளவில் தவறுகள் நடைபெறுவதையும் அறிய முடிகிறது.
எனவே ஆவின் நிர்வாகம் இனியாவது வெளிப்படைத்தன்மையோடும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் எனவும், ஆவின் நிறுவனத்தை உண்மையான அக்கறையோடு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் எனவும், போலியான சாதனைகளை தூக்கி எறியுமாறும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு சு.ஆ. பொன்னுசாமி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆவின் விற்பனை சாதனை குறித்து அறிக்கை