தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மார்ச் 22இல் பால் விநியோகம் நிறுத்தம்! - Corona Virus

வரும் 22ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பால் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Milk Agents Association Announcement
Milk Agents Association Announcement

By

Published : Mar 20, 2020, 3:57 PM IST

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க மாநிலத் தலைவர் பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இச்சூழலில் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எனவே கரோனா வைரஸ் பரவலைத் தடுத்திட மக்கள் தன்னார்வத்தோடு தனிமைப்படுத்திக்கொள்ள மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 1.5 லட்சம் பால் முகவர்களும் வரும் 22ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் முற்றிலுமாக பால் விநியோகத்தில் ஈடுபடப் போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் 22ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் காலை 6:30 மணி வரையிலும் பால் விநியோகம் செய்திடும் பணியை பால் முகவர்கள் மேற்கொள்வார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை (22ஆம் தேதி) பொதுமக்கள் நடமாட்டத்தைத் தவிர்த்திடும் வகையில் பால் முகவர்களுக்கு சனிக்கிழமை அன்று காலை, மாலை என இரு வேளைகளில் பால் கொள்முதல் செய்திட வசதியாக முன்னேற்பாடுகளை ஆவின், தனியார் பால் நிறுவனங்கள் செய்து தருமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கு - பிரதமர் மோடி வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details