சென்னை:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், நாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை, ராணுவ அதிகாரிகள் இன்று (டிச.06) ஹெலிகாப்டர் மூலம் வழங்கி வருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் எதிரொலியாக பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து பாதிப்புக்குள்ளாகியது. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும், நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இதில் அதிக பாதிப்புடைய பகுதிகளாக வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், கோவிலம்பாக்கம், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், நாராயணபுரம் பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலமாக மக்களுக்கு உணவு விநியோகம் தொடங்கியிருக்கிறது.
கனமழை காரணமாக பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், நாராயணபுரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரிநீர் காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்தனர்.