சென்னை:சென்னை அண்ணாசாலை அருகே ஒயிட்ஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ள இரண்டு குடியிருப்புகளில் இன்று (பிப்.22) காலை 10 மணிக்கு திடீரென நில அதிர்வு (Chennai Earthquake) ஏற்பட்டதாக கூறி குடியிருப்புகளில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் பதறியடித்து கட்டடத்தின் வெளியே ஓடி வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், அந்த பகுதி தவிர வேறு எந்த பகுதியிலும் நில அதிர்வு ஏற்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் அருகே நடைபெறும் மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டதாக குற்றம்சாட்டினர். இதனையடுத்து மெட்ரோ பணி அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்படவில்லை எனத் தெரியவந்தது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ முதன்மை பொது மேலாளர் லிவிங்ஸ்டனிடம் தொலைபேசி வாயிலாக கேட்டபோது, "சென்னையில் இரண்டாம் கட்ட பணிகளில் சுரங்கம் தோண்டும் பணி என்பது மாதவரத்தில் மட்டுமே நடைபெறுவதாகவும், அண்ணா சாலையில் எவ்வித சுரங்கம் தோண்டும் பணிகளும் நடைபெறவில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.