தாங்கள் எதற்காக தங்களது சொந்த மாநிலத்தை விட்டு வெளியேறினார்களோ, தற்போது அதையே இழந்து நிற்கதியாய் நிற்கிறார்கள் நாடு முழுவதுமுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாழ்வாதாரத்துக்காக குடும்பத்தை பிரிந்து, நெடுந்தூரம் பயணித்து, உழைத்து ஓடாய் தேய்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள், இன்று ஒருவேளை சோற்றுக்காக சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று கண்ணீரோடு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நாடு முழுவதும் மத்திய அரசாங்கம் ஊரடங்கை அறிவித்து, போக்குவரத்தை முடக்கியது அவர்களை நகரவிடாமல் செய்தது. கரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 40 நாள்களுக்கும் மேல் நீடிக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவில் 80 விழுக்காடு தொழில்கள் அமைப்புசாரா தொழில் துறையிலையே அடங்கியிருப்பதாகவும், அதிலும் அதிகளவிலான புலம்பெயர் தொழிலாளர்களே இதில் வேலை செய்வதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கால் இவை அனைத்தும் முடக்கப்பட்டு, புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை மேலும் மோசமடைந்தது.
ஏப்ரல் 14ஆம் தேதி வரை தங்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணிய சில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு நடைப்பயணமாகச் சென்று உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்கள் பல அரங்கேறியுள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த வாரம் பெங்களூருவில் கட்டுமானத் தொழில் செய்துவந்த ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நடந்தே சொந்த ஊருக்குச் சென்றார். சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றதால், ஊர் சேரும் முன்பே அவரின் உயிர் பிரிந்தது.
இதில் கொடுமை என்னவென்றால், அவருக்கு கரோனா இருக்கலாம் என்ற அச்சத்தில் குடும்பத்தினர் கூட அவரின் உடலை சீண்டவில்லை. விஷயமறிந்து உள்ளூர் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல் துறையினர் உடலை மீட்டு, அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பதை உறுதிசெய்தனர். அதன்பின்னரே அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதேபோல, தெலங்கானாவில் மிளகாய் பறிக்கும் வேலை செய்து வந்த சட்டீஸ்கரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், கால்நடையாக சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அவர் ஊர் சேர்வதற்கு 2 கிமீ தூரமே இருந்த நிலையில், சுருண்டு விழுந்து இறந்தார். குடும்பத்தைக் காப்பாற்ற தொலைதூரம் சென்ற தன் மகள் பிணமாக திரும்பி வருவாள் என எதிர்பார்க்கவில்லை என்று கண்ணீரோடு அவரது தந்தை புலம்பியது அனைவரையும் நிலைகுலையச் செய்தது.
இதுபோன்று நிறைய சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்க, வெளிச்சத்திற்கு வருவது சொற்பமே என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். ஒவ்வொரு கட்ட ஊரடங்கு முடியும் போதும், சொந்த ஊருக்குச் சென்றுவிடலாம் என்று நினைத்திருந்த தொழிலாளர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. பல உயிர்கள் மாய்ந்த பின், கடைசியாக மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பின்போதுதான், தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதுவும், உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் மூலமாகத்தான் அரசு இது சாத்தியமானது. ஆனால் மத்திய அரசாங்கம் மனசாட்சியற்று அவர்களிடம் ரயில் கட்டணத்தை வசூலித்தது. அடுத்த வேளை சோற்றுக்கே அல்லல்படும் இவர்களிடம், ரயில் கட்டணம் வசூலிப்பது முட்டாள்தனம் என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியே விமர்சனம் செய்தார். நாட்டில் மொத்தம் 5 கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிற நிலையில், அவர்களின் நிலையைக் கருதி மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் போனது அதன் கையாலாகாத்தனத்தைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.