தங்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பக்கோரி சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்ச் 24 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது 40 நாள்களை நெருங்கிவிட்டது.
இந்த நிலையில் முகாம்களில் வெளியுலக வாசமின்றி, சொந்தபந்தங்களில் அரவணைப்பின்றி இத்தனை நாள்கள் தவித்த வட மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் வேலையின்றி, கையில் பணமின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மே 17 ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கிலும் போக்குவரத்துக்கு தளர்வு அளிக்கப்படாவிட்டாலும், பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வழிபாட்டு யாத்திரைக்குச் சென்றவர்கள், மாணவர்கள் ஆகியோரை சிறப்பு ரயில்கள் மூலமாக அவர்களது மாநிலத்துக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
அறிவிப்பைத் தொடர்ந்து தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப வலியுறுத்தி சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வட மாநில கூலித் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வேளச்சேரி பகுதியில் ஊரடங்கை மீறி சாலையில் ஊர்வலமாகச் சென்றனர்.
"பல நாள்களாக ஒரே இடத்தில் முடங்கியிருந்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்துவிட்டோம், தற்போது வேலையில்லாமல் பொருளாதார சிக்கல்களால் தவித்து வருகிறோம். நாங்கள் வீட்டுக்குச் செல்ல உதவுங்கள்"
சென்னையில் ஆவடி, பெரம்பூர், அம்பத்தூர், கிண்டி, வேளச்சேரி என பல பகுதிகளிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டமாகக் கூடி வீடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏற்கெனவே சென்னையில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், இதுபோன்ற சம்பங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்ற அச்சம் எழாமல் இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் தொழிலாளர்களின் மனநிலையைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்கிறார் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பின் ஆலோசகர் கீதா.
இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், "தமிழ்நாட்டில் மூன்று வகையான புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். கட்டுமான தொழிலாளர்கள், கட்டுமானம் செய்யும் இடங்களிலேயே தார்ப்பாய், கூரை வைத்து தற்காலிக கூடாரம் அமைத்து தங்குபவர்கள். 7 முதல் 8 ஆண்டுகள் என நீண்ட காலமாக இங்கு தங்கி பணியாற்றுபவர்கள், நகரின் பல பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வருகிறார்கள். இவர்களைத் தவிர்த்து, உணவகங்கள், கடைகளில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களும் உள்ளனர்.