தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவியதைத் தொடந்து விதிக்கப்பட்ட ஊரடங்கினால் பெரும்பாலான ஏழை, நடுத்தர வர்கத்தினர் தங்களது வீட்டு வாடகை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். ஊரடங்கு அமலில் உள்ள கடந்த மூன்று மாதங்களாக சிறு தொழில்கள், வியாபாரிகள், தனியார் நிறுவனப் பணியாளர்கள், கூலித் தொழிலாளர்கள் எனப் பலரும் வேலையின்றி கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர், தினசரி உணவுக்குக்குக்கூட வழியில்லாமல் தவிக்கின்றனர். இதனால் வீட்டு வாடகை கொடுப்பது என்பது இயலாத காரியமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இவர்களது நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கு காலத்தில் வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது.
ஆயினும் சென்னை போன்ற நகரங்களில் வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களிடம் வீட்டின் உரிமையாளர்கள் வாடகை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என வற்புறுத்தி வருவதாக வாடகை வீடுகளில் வசிப்போர் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சென்னையில் வாடகை வீடு ஒன்றில் குடியிருக்கும் அண்ணாத்துரை என்பவர் கூறுகையில், "கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக எனக்கு வேலை இல்லை. என் ஒருவனின் சம்பாத்தியத்தில்தான் என் குழந்தைகளின் செலவுகள் உள்ளிட்ட அனைத்தையும் சமாளித்து குடும்பம் நடத்தி வந்தேன். திடீரென ஊரடங்கு அறிவித்ததால் என்னால் வேலைக்கு சென்று வருமானம் ஈட்ட முடியவில்லை.
தினந்தோறும் உணவுக்கே சிரமப்படும் நான் எவ்வாறு குடும்பத்தினரைக் காப்பாற்றுவது? ஏற்கனவே வேலை செய்யும் இடத்தில் நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளேன். இதில் வீட்டு வாடகை வேறு கட்ட முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீர் வடிக்கும் நிலையில் தான் நான் உள்ளேன்" என வேதனை பொங்கப் பேசினார்.
கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சீனாவில் தொடங்கி உலகெங்கும் கரோனா தொற்று பரவி வந்தபோது அனைத்து விமானங்களையும் ரத்து செய்து, வெளி நாடுகளில் இருந்து வருவோரை தனிமைப் படுத்தியிருந்தால், இன்று கரோனா நோய்த் தொற்று இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிற்குள் வந்திருக்க வாய்ப்பே இல்லை.
ஆனால் அவ்வாறு செய்யாமல் காலம் தாழ்த்தியதன் விளைவாக இன்று, ஊரடங்கு விதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முன் யோசனைகள் இல்லாமல் அரசு நிர்வாகங்கள் செய்த தவறுக்கு அப்பாவி பொது மக்கள் பசியிலும் பொருளாதார பாதிப்பிலும் கிடந்துத் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஏழை, நடுத்தர மக்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு வீடுகளுக்கான வரிகளை ஊரடங்கு காலத்தில் ரத்து செய்தும், வாடகை வசூலிப்பதிலிருந்து விலக்கு அளிக்கும் விதத்திலும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
இதையும் படிங்க :தமிழ்நாட்டில் 86 ஆயிரத்தை கடந்த கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை!