மைகரோசாப்ட் நிறுவனத்தின் Data மற்றும் AI இயக்குனர் சுசில்.எம்.சுந்தர் சிறப்பு நேர்காணல் சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்தியாவிலேயே முதல் முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு சாட் ஜிபிடி(ChatGPT) தொழில்நுட்பங்களை கற்பிக்க உள்ளதாகவும், இதற்கான பாடத்தை கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறையில் இந்தியாவில் முதல்முறையாக 'TEALS திட்டம்' தமிழ்நாட்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் முதலில் 13 பள்ளிகளில் முன்னோடியாக செயல்படுத்தப்பட்டது. அடுத்தக் கட்டமாக 100 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு சாட் ஜிபிடி(ChatGPT) தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத்தரும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள அமெரிக்காவின் மைகரோசாப்ட் நிறுவனத்தின் Data மற்றும் AI இயக்குனர் சுசில்.எம்.சுந்தர் ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "தமிழ்நாடு அரசும், மைக்ரோசாப்ட் நிறுவனமும் செய்துக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் 'TEALS' திட்டத்தை இந்தியாவில் முதல்முறையாக செயல்படுத்த உள்ளது.
மைக்ரோசாப்ட் TEALS பாடத்திட்டத்தை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க உள்ளோம். முதலில் 14 பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அடிப்படைப் பாடத்திட்டங்களை கற்பித்து வருகிறோம். அதனைத்தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு, 100 பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்படும்.
மாணவர்களின் செயல்திறன் புத்தாக்கத்திற்கு உதவும் AI:ஐபோன், வாட்ஸ்ஆப், அமேசான் எல்லாவற்றிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நமக்கு தெரியாமலே நாம் பயன்படுத்தி வருகிறோம். இது போன்ற தொழில் நுட்பத்தை மாணவர்கள் கற்றுக் கொள்வதால், சர்வதேச அளவில் மாணாக்கர்களின் செயல்திறனை அதிகரிக்க முடியும். உலகளவிலும் போட்டிப் போட முடியும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கற்றுத்தரப் போகிறோம்.
இது கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை விட முன்னோக்கியது. தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறக் குழந்தைகளுக்கும் கற்றுத் தரும்போது தொழில் மூதலீடுகள் அதிகளவில் வரும். இதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி, திறன்களை வளர்க்கும் போது, உள்நாட்டுப் பொருளாதாரம் வளர்வதுடன், சமூகப் பொருளாதாரமும் வளரும். நீண்டக் காலத்தில் நல்லப் பலனைத் தரும். பெற்றோர்கள் குழந்தைகள் படிப்பதற்கு உறுதுணையாக இருந்து ஊக்குவிக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களை உலகளவிலான தலைவர்களாக உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்.
6ஆம் வகுப்பில் 6வது பாடமாக உருவாகும் செயற்கை நுண்ணறிவு: முதலில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையில் கற்றுத்தர உள்ளோம். செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்திற்கான பாடத்திட்டம் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் 6ஆம் வகுப்பு முதல் கற்றுத்தர திட்டமிட்டு உள்ளோம். அடுத்த 2 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு கட்டாயப் பாடமாக வருவதற்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் மிஷன்லேனிங், டீக்லேனிங், காக்னிடேக் டெக்னாலாஜி, சாட் ஜிபிடி ஆகிய நுண்ணிறவு கலன்கள் குறித்து கருத்தியலாக கற்றுத் தரப்பட்டு, அதன் பின்னர் செயல்முறையாகவும் பயிற்சி அளிக்கிறோம். மைக்ரோசாப்ட் ஆஜூர் மூலம் குழந்தைகள் பயன்படுத்தி அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்த்தால் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி படிப்பிற்குச் செல்வார்கள்.
இந்தியா வல்லரசடைய வாய்ப்பளிக்கும் AI: பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர் ஆய்வகங்களிலேயே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை கற்றுத்தர உள்ளோம். அதனால் மாணவர்களின் திறன் வளரும். பள்ளி மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களே செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதற்கு மைக்ராேசாப்ட் நிறுவனத்தின் சான்றிதழும் வழங்கப்படும்.
தொழில் துறையில் உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு திறன்களை அளித்து தகுதிப் பெற்றுப் பின்னர், திறன் வாய்ந்த பணியாளர்களும் கிடைப்பார்கள். அதிகளவில் திறன் வாய்ந்த பணியாளர்கள் இருக்கும் போது, முதலீடுகளும் அதிகளவில் இருக்கும். உள் நாட்டுப் பொருளாதாரமும் அதிகளவில் வளரும். இதனால் தமிழ்நாடு முதல்நிலை மாநிலமாகவும், இந்தியா வல்லரசாகவும் வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:"பசியுடன் யாரும் இருக்கக் கூடாது என பிரதமர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறார்" - மத்திய அமைச்சர் வி.கே.சிங்!