சென்னை:மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கனமழை பெய்து வருவதால் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் விட்டு விட்டுப் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் 2 மணி நேரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை வரவிருந்த 23 விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் தரையிறங்க இருந்த 11 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை (நவ.04) அபுதாபி, துபாய், மும்பை, பக்ரைன், இலங்கை, டெல்லி, புனே ஆகிய இடங்களில் இருந்து சென்னை வந்த பத்து விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
விமானச் சேவை ரத்து:சென்னையில் இருந்து இலங்கை, துபாய், விஜயவாடா, கோவை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், அகமதாபாத், மும்பை, மதுரை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டிய 11 விமானங்கள், இலங்கை, கோவை, திருச்சி, விஜயவாடா, ராஜமுந்திரி, சேலம், தூத்துக்குடி, கொச்சி, மும்பை, அகமதாபாத், மதுரை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து வர வேண்டிய 12 விமானங்கள், என மொத்தம் 23 விமானங்கள் இன்று இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.