தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொலை வழக்கில் 2018ஆம் ஆண்டு பெண் ஒருவருக்கு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்! - chennai news

Madras High Court: முன்விரோதம் காரணமாகப் பெண்ணைத் தீ வைத்து கொலை செய்த பெண்ணுக்குக் கீழமை நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
கொலை வழக்கில் 2018ஆம் ஆண்டு பெண் ஒருவருக்கு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 10:28 PM IST

சென்னை: சென்னை வடபழனியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி தனக்குச் சொந்தமான வீட்டில் தன் மகள் ராணியுடன் வசித்துவந்தார். அந்த வீட்டின் மற்றொரு பகுதியை ஜமுனா ராணி என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்த நிலையில், அவரது செயல்பாடுகள் சரியில்லாததால், வீட்டை காலி செய்யச் சொல்லியுள்ளனர்.

வீட்டை காலி செய்த ஜமுனா ராணி, சில மாதங்களுக்குப் பிறகு தனக்கு கிருஷ்ணவேணியும், ராணியும் 85 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும், அந்த பணத்தைத் தராமல் ஏமாற்றுவதாகவும் வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி கோடம்பாக்கம் வன்னியர் தெருவில் உள்ள பால விநாயகர் கோயில் அருகே தன் மகளுடன் கிருஷ்ணவேணி பூ கட்டிக்கொண்டிருந்தார். அப்போது, அகல் விளக்குடன் கோயிலுக்கு வந்த ஜமுனா ராணி, அதை கிருஷ்ணவேணி மீது வீசியதில் அவரது உடைகளில் தீப்பற்றி, பலத்த தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மறுநாள் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த, சென்னை மகளிர் நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜமுனா ராணிக்கு ஆயுள் தண்டனை விதித்தது, இதனை அடுத்து சென்னை மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜமுனா ராணி மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ்பாபு அமர்வு, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளாக கிருஷ்ணவேணியின் மகள் ராணியும், கோயில் அர்ச்சகரும் உள்ளதாகவும், மகள் என்பதற்காக அவரது சாட்சியத்தைப் புறந்தள்ளிவிட முடியாது எனவும் குறிப்பிட்டனர்.

மேலும், முன்விரோதம் காரணமாக நடந்த தாக்குதல் என்பதை காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்ததை ஏற்றுக்கொண்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். எனவே, அந்த தீர்ப்பில் தலையிட எந்த காரணமும் இல்லை என கூறி, ஜமுனா ராணிக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதிசெய்தும், மேல்முறையீடு மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:தொடர் விடுமுறை எதிரொலி..! ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்..!

ABOUT THE AUTHOR

...view details