தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Harris Jayaraj: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு தடை!

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இறக்குமதி செய்த மசராட்டி காரின் நுழைவு வரிக்கு விதிக்கப்பட்ட 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC Stay to collecting penalty for musician harish jeyaraj imported car
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு தடை

By

Published : Jun 1, 2023, 8:06 PM IST

சென்னை: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கடந்த 2010 ஆம் ஆண்டு மசராட்டி (Maserati Granturismo S Coupe) எனும் இத்தாலி நாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்தார். அதை தமிழகத்தில் ஓட்டுவதற்கு ஏதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார்.

ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்துக்கு நுழைவு வரி செலுத்தவில்லை எனக் கூறி, வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகம் மறுத்து விட்டது. மேலும், 13 லட்சத்து 7 ஆயிரத்து 923 ரூபாய் நுழைவு வரி செலுத்தக் கூறி கடந்த 2019ம் ஆண்டு வட்டார போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு 2019ஆம் ஆண்டு முதல் நுழைவு வரியிடன் சேர்த்து அபராதமும் செலுத்த வேண்டும் என ஹாரிஸ் ஜெயராஜுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, நுழைவு வரி நீங்கலாக, 44 மாதங்களுக்கான அபராதமாக 11 லட்சத்து 50 ஆயிரத்து 952 ரூபாய் செலுத்தும்படி தமிழக போக்குவரத்து துறை, ஹாரிஸ் ஜெயராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம், காருக்கான நுழைவு வரியை ஏற்கனவே செலுத்தி விட்டதாகக் தெரிவித்தார்.

மேலும், நுழைவு வரி தொடர்பான வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, சில வழக்குகளில் நுழைவு வரியை மட்டும் செலுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், தனக்கு மட்டும் அபராதத்துடன் செலுத்தும்படி உத்தரவிட்டது பாரபட்சமானது எனவும் வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அபராதம் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: துபாய், கோலாலம்பூரில் இருந்து தங்கம் கடத்தல்.. திருச்சியில் குருவி கைது.. சுங்கத்துறை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details