திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசால் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை, நீதிபதி சதீஷ்குமார் முன்பு நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே திமுக தலைவர் மீதான எட்டு அவதூறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மேலும் ஆறு அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சார்பில் தொடரப்பட்ட மனுக்களின் மீதான விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று (மார்ச் 8) நடைபெற்றது.
வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், அதிமுக அரசு வணிகர்களுக்கு எதிராகச் செயல்பட்டுவருகிறது என்று குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட இந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என்று ஸ்டாலின் சார்பாக முன்னிலையான மூத்த வழக்கறிஞர் குமரேசன் வாதிட்டார்.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் பேசியது தொடர்பான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
அத்துடன், அமைச்சர் வேலுமணிக்கு எதிராகப் பேசியது உள்பட ஐந்து அவதூறு வழக்குகளின் விசாரணைக்கும் நீதிபதி இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்குகளின் விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வேட்பாளர் தேர்வில் கருத்து வேறுபாடு! ஓபிஎஸ்-இபிஎஸ் மீண்டும் மோதல்!