தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"500 டாஸ்மாக் கடை மூடலை எதிர்த்து வழக்கு - அரசு கொள்கை முடிவில் தலையிட முடியாது" - நீதிமன்றம்!

தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்த கொள்கை முடிவில், தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

அரசு கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 6:26 PM IST

சென்னை:தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஜூன் 20ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் கடைகளுக்கு கட்டிடங்களை வாடகைக்கு கொடுத்திருந்த உரிமையாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களில், கடைகளை மூட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அவற்றை திறக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் இன்று(டிச. 2) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், "குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்து கட்டிடங்களை வாடகைக்கு விட்டிருந்த நிலையில், திடீரென கடைகளை மூட உத்தரவிடப்பட்டதால் பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள கடைகளை மூடுவது என விதிகள் வகுத்துள்ள நிலையில், எந்த விதிமீறல்களும் இல்லாமல் தங்கள் கட்டிடங்களில் செயல்பட்டு வந்த கடைகள் மூடப்பட்டுள்ளது" என வாதிடப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், "கடைகளை நடத்துவது குறித்தும், மூடுவது குறித்தும் அரசு தான் முடிவெடுக்க முடியும்.

கட்டிட உரிமையாளர்கள் தங்கள் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தான் தெரிவிக்க வேண்டுமே தவிர்த்து, நீதிமன்றத்தை நாட முடியாது" என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மனுதாரர்களுக்கும், அரசுக்குமான தொடர்பு என்பது நில உரிமையாளர் - வாடகைதாரர் உறவு தான்.

தனது தொழிலை மூடுவது தொடர்பாக முடிவெடுக்க வாடகைதாரருக்கு முழு உரிமை உள்ளது. அரசின் முடிவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளிடம் முறையிடலாமே தவிர்த்து, வழக்கு தொடர முடியாது" எனக்கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்ந்து, "பொது நலனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக அரசு எடுத்துள்ள கொள்கை முடிவை எதிர்த்து நில உரிமையாளர்கள் வழக்கு தொடர முடியாது. கடைகளை மூடுவது குறித்து அரசு முடிவெடுக்கலாம். 500 டாஸ்மாக் கடைகளை மூடிய அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.

அதேசமயம், மனுதாரர்கள் அவர்களது குறைகளுக்கு அரசை அணுகி நிவாரணம் கோரலாம். இது சம்பந்தமான முறையீட்டை பரிசீலித்து அரசு முடிவெடுக்கலாம்" என்று நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் விவகாரம்! இறுதி கட்ட வாதம் நிறைவு! டிச.4ல் தீர்ப்பு - உயர்நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details