சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நடக்க உள்ளதாகவும், இந்த விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி கோயில் பரம்பரை அறங்காவலர் தங்கராசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், கோயில் திருவிழா நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையில் பிரச்னை உள்ளதாகவும், தாசில்தாரர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்ட முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையில் பிரச்னை ஏற்படுவது தொடர்பாக தினந்தோறும் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன எனத் தெரிவித்தார்.
மனதில் அமைதி வேண்டியும், மகிழ்ச்சிக்காகவும் கோயிலுக்கு வழிபாடு நடத்தச் செல்கின்றனர். ஆனால் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிருஷ்டவசமானது என நீதிபதி வேதனை தெரிவித்தார். கோயில் திருவிழாக்கள், யார் பலம் வாய்ந்தவர்கள் என நிரூபிக்கவே நடத்தப்படுவதாகவும், உண்மையான பக்தி எதுவும் இல்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் பண மோசடி.. காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!