தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி டாக்டர் பட்டம்: ராஜு ஹரிஷின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய அமைப்பின் இயக்குனர் ராஜு ஹரிஷின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 4, 2023, 2:26 PM IST

சென்னை:சென்னையைச் சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும், இசை அமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேல், நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் உள்ளிடோருக்கு 'கௌரவ முனைவர் பட்டம்' மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். தனியார் அமைப்பு சார்பில் டாக்டர் பட்டம் வழங்கியதும், நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைகழகம் இடம் வழங்கியதும் சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், கையெழுத்து முறைகேடாக நடைபெற்றதாக ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன.

அதன்படி நிகழ்ச்சி நடத்திய அமைப்பின் இயக்குனரான ராஜு ஹரிஷ் என்பவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர். இதனைத் தொடர்ந்து, அவர் தலைமறைவானதால் காவல் துறையினர் அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த ராஜு ஹரிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், "படிக்க இயலாதவர்களுக்கு கல்வி வழங்குவது, மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கல்வியில் முன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், இதேபோன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி நடந்த நிகழ்ச்சிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பு இல்லை என்றும், அதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தன் மீது தவறாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், மார்ச் 1ஆம் தேதி தன்னை கைது செய்யும் நோக்கத்துடன் விசாரணை நடத்தியதாக தெரிவித்துள்ளார். காவல்துறை நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக கூறி, தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்" என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பாக இன்று (மார்ச்.4) விசாரணை வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் செல்வம் ஆஜராகி, அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் ஓய்வுபெற்ற நீதிபதி அளித்த புகாரிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் வாதிட்டார். காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன் ஜாமீன் கோரிய ராஜு ஹரிஷின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:'கவுரவ டாக்டர் பட்டம் வழங்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது' - சர்ச்சையில் சிக்கிய நிறுவனம் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details