சென்னை: நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியைச் சேர்ந்த குருசந்த் வைத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "மசினகுடியில் எனக்கு சொந்தமான நிலத்தில் காய்ந்துபோன மூங்கில் மரங்கள் உள்ளது அவை அனைத்தும் எனது தாத்தா காலத்தில் வைக்கப்பட்டதாகும். மேலும், வளர்ந்து காய்ந்துபோன மூங்கில் மரங்களை வெட்டாததால், அந்த நிலத்தில் மற்ற விவசாயம் செய்ய முடியவில்லை. அதுமட்டும் இல்லாமல், மூங்கில் மரங்களை அகற்றவில்லலை என்றால் வனப்பகுதியில் காட்டு தீ எற்படவும் அதிக வாய்ப்புள்ளது.
ஆகவே, தற்போது அந்த மரங்களை தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெட்ட அனுமதிக்க வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பல்வேறு காலகட்டங்களில் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. எனவே, காய்ந்து போன நிலையில் உள்ள மூங்கில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வி.அருண், அந்த நிலத்தை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அந்த பகுதி யானைகள் வழிதடமாக உள்ளதாக தெரிவித்தார். மொத்தமாக இருக்கக்கூடிய 61.85 ஏக்கர் பரப்பளவில், 20 ஆயிரத்து 309 மூங்கில் கொத்துகள் உள்ளதாகவும், ஒவ்வொரு கொத்திலும் 50 முதல் 80 வரை மூங்கில் மரங்கள் உள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக 19லட்சம் மூங்கில் மரங்கள் அந்த பகுதியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.