தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு ஏன்? சென்னை உயர் நீதிமன்றம்..

Sterlite case: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கியது ஏன்? எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

MHC questioned The state why promoted police officers who involved thoothukudi Sterlite gun firing issue
சென்னை உயர் நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 3:25 PM IST

சென்னை:தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி போராடிய மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த வழக்கைத் தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கை அடிப்படையில், சம்பவத்தின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த V.வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், மாவட்ட எஸ்.பி.யாக இருந்த P.மகேந்திரன், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அருணா ஜெகதீஷன் ஆணையத்தின் அடிப்படையில் விசாரணை செய்ய வேண்டாமா? ஆணையம் பரிந்துரைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அல்லது கைவிடப்பட்டதா? அரசு பரிந்துரைப்படி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அதன் விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில், ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை துவங்கி விட்டதாகவும், யார் மீது நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது என்ற பட்டியலையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் போது பதிவு உயர்வு வழங்கியது ஏன்? என அரசுக்குக் கேள்வி எழுப்பினார். பதவி உயர்வு வழங்குவதாக இருந்தால் வீரப்பன் வழக்குகளில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கியது போல 17 காவலர்களுக்கும் வழங்கியிருக்கலாமே எனக் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர், 17 காவல்துறை அதிகாரிகள், 3 சிறப்பு தாசில்தார்கள், சிபிஐயிடம் சாட்சியம் அளித்த சிபிஎம் (ஐ) மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் ஆகியோரை வழக்கில் இணைக்க மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: முரசொலி அலுவலக நில விவகாரம்; தேசிய பட்டியல் சமூகத்தினருக்கான ஆணையம் விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details